கோவை: போக்குவரத்து துறை உரிய கட்டணத்தை நிர்ணயித்தால் அதன்படி ஆம்னி பேருந்துகளை இயக்க தயார் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் நிறுவனர் ஜெயம்பாண்டியன், முறையான வரி செலுத்தி இருந்தாலும் விடுமுறை காலங்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வழிப்பறி செய்வது போன்று ஆம்னி பேருந்துகளை நிறுத்தி அபராதம் விதிப்பதாக தெரிவித்தனர். ஒரு டோல்கேட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைப்பதாக சாடிய அவர்கள் இதனால் பயணிகளுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
புதிய அதிகாரிகள் வரும்பொழுது நடைமுறை தெரியாமல் செக்கிங் ஆர்டர் போட்டு விடுவதாகவும் கூறினர். போக்குவரத்து துறை அமைச்சர் நல்ல முறையில் பேசினாலும் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டு தேவையில்லாத அபராதங்களை விதிப்பதாக தெரிவித்தனர்.
அதிகாரிகள் சோதனை செய்வதற்கு நாங்கள் தடையாக இருப்பதில்லை எனவும் ஆனால் கூட்டம் இல்லாத நேரத்தில் நேரடியாக ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொள்ளலாம் ஆனால் அதனை விட்டுவிட்டு பயணிகள் இருக்கும் பொழுது சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
போக்குவரத்து துறை சார்பில் ஆம்னி பேருந்துகளுக்கு எந்த ஒரு கட்டணத்தையும் நிர்ணயிப்பதில்லை, ஆனால் கட்டணத்தை நாங்கள் அதிகமாக வசூலிக்கிறோம் என்று கூறி அபராதம் விதிப்பதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய கட்டணத்தை நிர்ணயித்தால் அதற்கு தகுந்தார் போல் நாங்கள் பேருந்துகளை இயக்குவதற்கு தயார் எனவும் கூறினர்.
நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாநில வாரியாக 1.20 லட்சமும் மாநிலங்களுக்கு இடையேயான வரிகளாக 90 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாகவும் சாலை வரிகளை மட்டுமே வருடத்திற்கு 6 லட்சம் 7 லட்சம் என்று செலுத்தி வருவதாக தெரிவித்த அவர் ஒன் இந்தியா பர்மிட் வரி நாங்கள் கட்டுவதாகவும் அப்படி இருக்கும்பொழுதும் தங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதிப்பதாக கூறினர். கஞ்சா வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது போன்று எங்களுக்கும் அபராதம் விதிப்பதாக தெரிவித்தனர்.
வார நாட்களில் 500 ரூபாய் 600 ரூபாய் என்ற கட்டணத்தில் தான் நாங்கள் பேருந்தை இயக்கி வருவதாகவும் அதில் லாபம் இல்லை என்றாலும் பேருந்து பழுதாகி விடக்கூடாது என்பதற்காகவே இயக்குவதாக கூறிய அவர்கள் எனவே தொடர் விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் சற்று கட்டணத்தை உயர்த்துவது போன்று மறைமுகமாக சுட்டிக்காட்டினர்.
அனைத்து ஆவணங்களை நாங்கள் உரிய முறையில் வைத்திருந்தாலும் சீட்டு பெல்ட் இல்லை என்று ஏதேனும் ஒரு காரணத்தை கூறி அபராதம் விதித்து வருவதாகவும் இதனால் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் மன உளைச்சல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் அடுத்த கட்டமாக போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர்.