கோவை: கோவையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.
வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தேசிய கொடியினை பறக்கவிட்டு மரியாதை செலுத்த உள்ளார்.
குடியரசு தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம். வ.உ.சி மைதானத்தில் (26.01.2026) அன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் காலை 08.05 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தேசியக் கொடியினை பறக்கவிட்டு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். மேலும் இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
தொடர்ந்து, தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.டி மேரி மேல்நிலைப்பள்ளி, இரத்தினபுரி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மாரியம்மாள் உயர்நிலைப்பள்ளி, மசக்காளிப்பாளையம் நடுநிலைப்பள்ளி, கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி, மாநகராட்சி மலுமிச்சம்பட்டி இசைக்கல்லூரி ஆகிய பள்ளி சேர்ந்த மாணவ மாணவியர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் என அனைவரும் திரளாக பங்கு கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

