கோவை: நகைப்பட்டறை, நகை கடைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஒழுங்கு சான்றிதழ் வாங்கி வர அறிவுறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளார்.
கோவையில் நகைப்பட்டறை, நகை கடைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஒழுங்கு சான்றிதழ் வாங்கி வர அறிவுறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளார். திருட்டு, கொள்ளையை தடுக்க போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.
தொழில் நகரமான கோவையில் தங்க நகை தொழிலும் ஒரு முக்கயமான தொழிலாக இருந்து வருகிறது. கோவை காந்திபார்க், பெரிய கடை வீதி, மாநாக வீதி, கருப்ப கவுண்டர் வீதி, குலாலர் வீதி தியாகி குமரன் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகள், சிறிய, பெரிய தங்க நகை கடைகள் உள்ளன.
அங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் 2, 3 ஆண்டுகள் பணிபுரிந்து நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்று விடுகின்றனர்.
அதேபோல, சில பட்டறைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் உள்ளனர். இங்கும் கொள்ளையர்கள் சுலபமாக கொள்ளையடித்து தப்பி விடுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பட்டறையில் 2 கொள்ளையர்கள் சுலபமாக உள்ளே நுழைந்து ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.
அவர்களை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். மேலும் இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தங்க நகை தொழிலாளர்களிடம் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதவாது:
கோவையில் தங்க நகை தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் அங்கிருந்து வரும் போதே நகைப்பட்டறை உரிமையாளர்களிடம் சில வருடங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்பின்னர், கையில் கிடைக்கும் நகைளை சுருட்டி தப்பி விட வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர்.
பின்னர், அவர்கள் நகைகளை கொள்ளையடித்து வடமாநிலங்களுக்கு தப்பி விடுகின்றனர். அவர்களை அங்கு சென்று பிடிப்பது என்பது கஷ்டமான ஒன்று. மேலும் அவர்கள் வேலைக்கு சேரும் போது போலி ஆவணங்களை உரிமையாளர்களிடம் கொடுக்கின்றனர். திருட்டு, கொள்ளை சம்பவம் நடந்த பின்னரே அதுவும் தெரிய வருகிறது.
இதனால், வேலைக்கு வரும் நபர்களின் விவரங்களை அந்தந்த போலீஸ் நிலையங்களில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேலைக்கு வரும் வடமாநில நபர்கள் அவர்களது மாவட்ட போலீசாரிடம் இருந்து ஒழுங்கு சான்றிதழ் வாங்கி வர அறிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை போலியாக தயாரித்து வந்தாலும், கோவை போலீசாரின் விசாரணையில் கண்டு பிடித்துவிட முடியும். இதன்மூலம், திருட்டு கொள்ளையை தடுக்க முடியும். அதேபோல நகை பட்டறை உரிமையாளர்கள், நகை கடை உரிமையாளர்களிடம் சிசிடிவி கேமிரா, இரும்பு லாக்கர், இரும்பு கேட் பொருத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

