கோவை: குனியமுத்தூரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குனியமுத்தூரை அடுத்த அன்னமநாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவர் கடந்த 28ம் தேதி இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.
தொடர்ந்து நேற்று நள்ளிரவு சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அதனுள் இருந்த 34 பவுன் தங்க நகைகளும், ரூ.40 ஆயிரம் பணமும் கொள்ளைபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.