கோவை: கோவை சோமையம்பாளையம் ஊராட்சியில் ஆணிவேர் அமைப்பின் சார்பில் 5000 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது.
கோவையில் செயல்பட்டு வரும் ஆணிவேர் தன்னார்வ அமைப்பு மூலம் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என இணைந்து வடள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தன்னார்வ பணிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டை மற்றும் காவல் நிலையம் முதல் மருதமலை அடிவாரம் வரை உள்ள நீர்வழிப்பாதைகளில் சுமார் 5,000 பனை விதைகளை நடவு செய்யும் பணிகள் தொடர்ந்து 5 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
கடந்த 4 வாரங்களில் 4000 விதைகள் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் கூடுதலாக 1000 விதைகள் நடப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், ஆணிவேர் தன்னார்வலர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரே நாளில் பாரதியார் பல்கலைக்கழக்கம் பின்புறம் முதல் மருதமலை அடிவாரம் வரை 1000 விதைகளை நடவு செய்தனர்.


