கோவை: கோவையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உப்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (26), நேற்று முன்தினம் தனது மனைவி லீனா (23) உடன் பைக்கில் கோவைக்கு வந்திருந்தார். அவர்கள் சத்தி சாலையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மால் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொள்ளாச்சியைச் சேர்ந்த அரவிந்த்குமார் (33) ஓட்டி வந்த மற்றொரு பைக் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், இரு பைக்குகளிலும் சென்ற 3 பேரும் பலத்த தாக்கத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அலெக்ஸாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி லீனா மற்றும் மற்றொரு பைக் ஓட்டிய அரவிந்த்குமார் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

