கோவை: சொக்கம்புதூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி சொக்கம்புதூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி சொக்கம்புதூர் மின் மயானம் அருகே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் பள்ளிகள் தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகிறது. அதே சமயம் மின் மயானம் அருகே குப்பைகள் தரம் பிரிக்கும் மையமும் செயல்பட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் ஏற்கனவே சிரமப்பட்டு வருகின்றனர்.
Advertisement

இந்நிலையில் குப்பை தரம் பிரிக்கும் மையம் மின் மயானம் உள்ள பகுதியிலேயே தற்போது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குப்பை தரம் பிரிக்கும் மையத்தால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருவதாகவும் அதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது கழிவு நீர் சுத்திகரிப்பு மையமும் அமைந்தால் அதிகப்படியான துர்நாற்றம் வீசும், அதிகப்படியான மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு போன்றவை ஏற்படும் என்றும் பல்வேறு உடல் நல பிரச்சினைகள் ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வடவள்ளி பகுதியை சார்ந்து அமைக்கப்படுவதாக கூறபடும் நிலையில் வடவள்ளி பகுதியில் அமைக்காமல் இங்கு ஏன் அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள அப்பகுதி மக்கள் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், இதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் இல்லையெனில் அதிகப்படியான மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பாஜக உட்பட சில அமைப்புகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.