Header Top Ad
Header Top Ad

பகீர் வீடியோ காட்சிகள்: கோவையில் ஆட்டை குதறி தெருநாய்கள் அட்டகாசம்!

கோவை: கோவையில் பட்டப்பகலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆட்டை, தெருநாய்கள் கூடி கடித்துக் குதறிய சம்பவம் நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளது.

தமிழகத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனியாக நடந்து செல்லும் மற்றும் விளையாடும் குழந்தைகளை தெருநாய்கள் கடித்துக் குதறி வருகின்றன.

இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தெருநாய்களால் பல கொடூரங்கள் அரங்கேறி வந்தாலும், இந்த பிரச்னையை முறையாக கையாள ஆள் இல்லாத நிலை தொடர்கிறது.

கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களிலும் தெருநாய்கள் பல்கிப் பெருகியுள்ளன. இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி பீதியைக் கிளப்பும் இந்த நாய்களால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

Advertisement

நாய்கள் கருத்தடை மையம் முறையாக செயல்படுவதில்லை என்பதே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநகராட்சி 86வது வார்டு கரும்புக்கடை சலாமத் நகரில் தெருநாய்கள் கூட்டாக விரட்டிச் சென்று கடித்துக் குதறியுள்ளன. அப்பகுதியில் உள்ள பெண் பக்கெட்டுகளை எடுத்து வீசி நாய்களை துரத்த முயன்றும் விடாப்பிடியாக அந்த நாய்கள் ஆட்டின் கழுத்தை வெறியுடன் கடித்துக் குதறியும் சிசிடிவி காட்சிகள் வெளியாக காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “புல்லுக்காடு கழிவுநீர் பண்ணை அருகில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தில் இருந்து மொத்த நாய்களையும் 86வது வார்டில் திறந்து விடுகிறார்கள்.

அது கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு இங்கேயே வளர தொடங்கி விடுகிறது.
இந்த நாய்கள் உணவுக்காக, வளர்ப்பு பிராணிகளான கோழி, ஆடு, மாடு, போன்ற கால்நடைகளை கூட்டாக சேர்ந்து தாக்குகிறது. குழந்தைகளையும், பெரியவர்களையும் கடிப்பதற்கு துரத்துகிறது. ஒரு சில நபர்களை கடித்துக் குதறுகிறது.

மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.” என்றனர்.

இந்த செய்தி குறித்த தங்கள் கருத்தை கீழே உள்ள பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் வாசகர்களே

1 COMMENT

Comments are closed.

Recent News