Header Top Ad
Header Top Ad

கோவை முழுக்க ஒரே நேரத்தில் வேட்டை: எஸ்.பி., கார்த்திகேயன் அதிரடி – வீடியோ காட்சிகள்!

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கஞ்சா வேட்டையில் 36 பேர் கைது செய்யப்பட்டு 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனின், நேரடி மேற்பார்வையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்கும் வகையிலும், வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட குற்றவாளிகளைக் கண்டறியும் விதமாக தாபாக்களிலும் கடந்த சில மாதங்களாக Storming Operation என்ற பெயரில் அதிரடி சோதனைகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்கள் “Operation – Drug Free கோவை” என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில், தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

முன்னதாக கடந்த நாட்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 927 நபர்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட பட்டியல் ஒன்றும் தயார் செய்யப்பட்டது.

Advertisement

இந்த பட்டியலானது தரவுகள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மாவட்டத்தில் 89 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 300 போலீசார் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

துணை காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் தேவையான வழிமுறைகள் வழங்கப்பட்டது.

இதில், 761 நபர்கள் தேடுதல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
461 நபர்கள் நேரடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 289 நபர்கள் தற்போது மாவட்டத்தில் இல்லாதவர்கள் என உறுதி செய்யப்பட்டது. 11 நபர்கள் இறந்து விட்டதாகவும் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில், 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம்,
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கே இருந்து வந்தது? யார் ? மூலம் விநியோகம் செய்யப்பட்டது? என்கிற கோணத்தில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தேடுதலின் போது பிடிபட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேலும் சில முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கைது செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் போன்ற சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் காவல் துறையின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்றும், இவ்வாறான கண்காணிப்பில், சட்ட விரோத செயல்கள் கண்டறியப்பட்டால் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

வீடியோ காட்சிகள்…

Recent News