கோவை: SIR ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்தான ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர் தகுதி, சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அவசியம், முக்கிய செயல்பாட்டாளர்கள் யார்?, முக்கிய செயல்முறைகள், முக்கிய படிநிலைகள், கண்கெடுப்பு படிவம், கணக்கெடுப்பு படிவத்துடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டு அரசியல் கட்சியினரின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்பதாகவும் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கேட்டுக் கொண்டனர். அதே சமயம் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட மாநில வாக்காளர்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை என்றும் இதுகுறித்து முன்கூட்டியே அரசியல் கட்சிகளிடம் கலந்துரையாடியிருக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களாகவே முடிவெடுத்த பின்பு இதனை அனைத்து அரசியல் கட்சியினருக்கு வலியுறுத்துவது என்பது ஏற்புடையது அல்ல என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் ஈஷா பகுதியில் உள்ள வாக்காளர்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.
இது குறித்து பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்த சிறப்பு தீவிர திருத்தம் என்பது தற்பொழுது அவசியம் அல்ல என்று தெரிவித்தார். PLA மூலம் நாங்கள் அளிக்கக்கூடிய ஒத்துழைப்பிற்கு வரக்கூடிய நாட்களில் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார். இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அவர்கள் வாக்காளர்களாக ஆகலாம் அதற்குப் பின்பு நடைபெற்ற ஒன்பது தேர்தல்களில் வாக்களித்த யாரும் வாக்காளர்களாக சேர முடியாது என்ற நிலையை தான் தெரிவித்ததாகவும், புலம்பெயர் மக்களின் வாக்குரிமை குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கமும் தேர்தல் ஆணையத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவர் பீகாரில் வாக்களித்த ஒருவர் இங்கும் ஆறாம் எண் படிவத்தை கொடுத்து வாக்காளர்களாக சேர்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாகவும் இதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பூத் வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் எதன் காரணமாக நீக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தர வேண்டும் என்றும், இந்த சிறப்பு தீவிர திருத்தம் என்பது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னால் வாக்காளர்களாக சேரக்கூடியவர்களுக்கு அவர்களது படிவங்களை தனியாக பிரித்து குடியிருப்பு உட்பட அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று கூறுவது குடியுரிமையோடு சம்பந்தப்பட்ட காரணம் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு தற்போதைக்கு எந்த ஒத்துழைப்பும் தருவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் முகாம்கள் நடத்துவது என்பது வழக்கமான் ஒன்று தான் என்றும் ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஒரு முடிவை செய்துவிட்டு அரசியல் கட்சிகளை அதற்கு பின்னால் இழுத்து வரும் நிலைதான் என்றும் இந்த சிறப்பு சீர்திருத்தம் செய்கிறோம் என்பது பற்றி முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் பேசவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



