கோவை: கோடைகால பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக கோவை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவையில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று கோவையில் 36.7 டிகிரி வெப்பம் பதிவானது. தகிக்கும் இந்த வெயிலில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.
அவை பின்வருமாறு:

தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் கோடைகாலத்தில் வெப்ப தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல்கள்.
செய்ய வேண்டியவை
- வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் தொப்பி அணிந்து அல்லது குடை பிடித்துச் செல்லவும்.
- வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது காலணி (Chappals or Shoes) அணிந்து செல்ல வேண்டும்.
- வெயிலில் செல்ல நேர்ந்தால் வெளிர்ந்த நிறமுடைய (Light Colour) தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்
- வெயில் நேரங்களில் வெளியில் செல்லும்போது தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச்செல்ல வேண்டும்
- தாகம் எடுக்காவிட்டாலும் கூட அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்த வேண்டும்.
- நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, முலாம்பழம் ஆரஞ்சு, திராட்சை, அன்னாசிப் பழங்கள் மற்றும் வெள்ளரி போன்றவற்றை உட்கொள்ளலாம்.
- எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
- வெயில் நேரங்களில் காற்றோட்டம் நிறைந்த மற்றும் குளிர்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும்.
- வீட்டின் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். மின்விசிறி அல்லது ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.
- வெயில் நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களைத் திரைச்சீலைகளை (Screen) கொண்டு மூடி வைக்க வேண்டும்.
- குழந்தைகள் கர்ப்பிணிப்பெண்கள். முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் (Comorbidities)கவனமாக இருக்க வேண்டும்.
- தொழிலாளர்கள் நிழலான இடங்களில் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில் தற்காலிக கூடாரங்களை உருவாக்குவதன் மூலம் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
- கடினமான மற்றும் திறந்தவெளியில் செய்யும் வேலைகளை வெயில் குறைவாக உள்ள மற்றும் மாலை வேளைகளில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
- கடினமான வேலைகளைச் செய்பவர்கள் அடிக்கடி சிறு சிறு ஓய்வு எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
- தலைவலி மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையம் அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்யக்கூடாதவை
- காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெய்யிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonates) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.
- வெயில் நேரங்களில் திறந்தவெளியில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும்.
- வெயிலில் குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கதவு அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பநிலை அபாயகரமான நிலையில் உயரக்கூடும்.

எனவே பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.