கோவையில் த.வெ.க., நிர்வாகிக்கு உருட்டுக் கட்டை அடி!

கோவை: கோவையில் கட்சி மீட்டிங் நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் த.வெ.க., நிர்வாகியை உருட்டுக் கட்டையால் தாக்கிய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சேர்ந்தவர் சுபாஷ்(30). இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர்கான்(25) மற்றும் கணபதியைச் சேர்ந்த அருண்குமார்(27).

இவர்கள் சிறுவயது முதலே நண்பர்களாகப் பழகி வந்தனர். இதில் சுபாஷ் த.வெ.க., வார்டு செயற்குழு உறுப்பினராகவும், அருண்குமார் வார்டு துணை உறுப்பினராகவும் உள்ளனர். ஜாகீர்கானும் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், கட்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தும்போது, அதில் ஜாகீர்கான் பங்கேற்காமலும், சக நண்பர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சுபாசுக்கும், ஜாகீர்கானுக்கும் இடையே கருத்து மோதல் உருவானது. இந்நிலையில், நேற்று முன்தினம் அருண்குமார், சுபாஷ் ஆகியோர் பாலா என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜாகீர்கான், செல்போனில் சுபாசை தொடர்பு கொண்டு கட்சி மீட்டிங் தொடர்பாகப் பேச வேண்டும், உடனே வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு சுபாஷ் மது அருந்திக் கொண்டிருப்பதால் மற்றொரு நாள் அது சம்பந்தமாகப் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சுபாஷ் அன்று இரவு தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஜாகீர்கானுக்கும், சுபாசுக்கும் கட்சி மீட்டிங் தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜாகீர்கான் தகாத வார்த்தைகளால் பேசி சுபாசை அடித்து உதைத்தார். பின்னர் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சுபாசை தாக்கி மிரட்டி விட்டுச் சென்றார்.

இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர்கானை கைது செய்தனர்.

இது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp