கோவை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல்மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இம்மருத்துவ முகாமில் இடம்பெறவுள்ளது.
இது மட்டுமல்லாமல் கூடுதல் சிறப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவர்களால் இங்கேயே பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அங்கேயே அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
அதே போல் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் புதிய பயனாளர்களை சென்றடையும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் நடைபெறும் முகாம்களில் புதிய காப்பீடு திட்டத்திற்கு இணைவதற்குரிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் புற்று நோய் பாதிப்புகளை ஆண், பெண் என்று இருபாலருக்கும் கண்டறியும் பரிசோதனைகளும் இந்த முகாம்களில் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாம்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும்.
இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (18ம் தேதி) அரிசிபாளையம் வட்டாரத்திலுள்ள, செட்டிபாளையம், ஸ்ரீலட்சுமிநாராயணன் விசாலாட்சி கலைக்கல்லூரியிலும், 20ம் தேதி (சனிக்கிழமை) கோவை மாநகராட்சி (கிழக்கு) பகுதிக்குட்பட்ட, மாநகராட்சி நடுநிலைபள்ளி, ஐயர் லே அவுட் நீலிகோணம்பாளையம் மற்றும் சூலூர் வட்டாரத்திலுள்ள அரசு உயர்நிலைபள்ளி, செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

