கோவை: கோவையில் தார் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சின்னக்கள்ளிப்பட்டி கிராமத்தில் தார் கலவை தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஆலை, சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 50 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் மாசினால் விவசாய நிலங்கள், கால்நடைகள், வனவிலங்குகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஆலை நிலத்தடி நீர், காற்று மற்றும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும். இந்த தார் ஆலை அமைக்கப்பட்டால், விவசாயம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்த ஆலையை அமைவதை நிறுத்த வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.