கோவை: ஒரே ஆண்டில் 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து, தமிழ்நாடு சார்பு நீதிமன்றங்கள் வரலாற்றில் தனி முத்திரை பதித்த கோவை வழக்கறிஞருக்கு ‘கிங் ஆஃப் கன்விக்சன்’ என்று கோவை போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சார்பு நீதிமன்ற வரலாற்றில், ஒரே ஆண்டில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் நான்கு கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
சமூகத்துக்கு பாதகம் மற்றும் சட்ட ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கின்ற கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி குற்ற வழக்குகள், மோசடி ஊழல் வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சார்பு நீதிமன்றங்களில் அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞராக பி. கிருஷ்ணமூர்த்தி பணியாற்றி வருகிறார். வழக்குகளில் இவர் திறம்பட வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொலை, கொள்ளை, மோசடி, வழிபறி உள்ளிட்ட முக்கிய குற்ற வழக்குகள் உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில், அரசு தரப்பு வழக்கறிஞராக வாதாடிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, இதில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.

காவல் துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அரசு தரப்பு சாட்சியங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துத் திறம்பட வாதாடிய அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினர்.
மேலும், ‘கிங் ஆஃப் கன்விக்சன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “நீதியை நிலைநாட்ட நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வழக்கறிஞர்களின் வாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பாதிக்கப்படத் தரப்பு, அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் காவல்துறை என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து வழக்குகளை நடத்துவது சவாலானது. அந்த சாவல்களை சாதுரியமாக எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்களை முன் வைத்து வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படு வருகின்றன.
இதில் சார்பு நீதிமன்றங்கள் வரலாற்றில் அதிக வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்குப் பக்கபலமாக நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் அமையும் வகையில், எனது இந்த பணி வீரியமுடன் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.