கோவை: கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வானகம் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டியாகும். நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் போட்டியாகும்.

இந்த போட்டியில், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 14 மாணவர்களை கொண்ட அணியான ‘டீம் ரிநியூ’, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் தங்களின் புதிய முன்மாதிரி வாகனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அணியே இப்போட்டியின் ஹைட்ரஜன் எரிபொருள் பிரிவில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் ஒரே அணி ஆகும்.
இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்வு குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடைபெற்றது. ப்ரோபெல் இ.வி. நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் இந்த வாகனத்தை அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ஷெல் ஈக்கோ-மேரத்தானில் டீம் ரிநியூ பங்கேற்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 21 முதல் 25 வரை கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள லுசைல் சர்வதேச சர்க்யூட்டில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்த ஹைட்ரஜன் எரிபொருள் பிரிவு என்பது குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது. வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் திறனுக்காக, மீன்கொத்தி பறவையின் அலகு போன்ற வடிவம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தின் எடையைக் குறைத்து வலிமையை அதிகரிக்க ‘பசால்ட் ஃபைபர் – பிவிசி ஃபோம்’ கலவைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்த வாகனத்தின் மொத்த எடை 45 கிலோ ஆகும்.
ஒரு கன மீட்டர் ஹைட்ரஜனைப் பயன்படுத்தி 600 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் வகையில் இதன் ஆற்றல் திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 42 லட்சம் செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

