கோவை: கோவை மாநகராட்சி ரத்தினபுரி மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் – 46க்குட்பட்ட இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள் 83 ஆரம்பப்பள்ளிகள் மற்றும் 1 சிறப்பு பள்ளி என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.
இப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக விளையாட்டுத் துறையில் பள்ளி மாணவ மாணவியர்கள் சிறந்து விளங்கும் வகையில், விளையாட்டிற்கு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு மாநகராட்சிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று 64 பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பங்குபெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான 2025-2026 ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகளை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் குழுப்போட்டிகள், புதிய விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 09.02.2026 வரை பல்வேறு பள்ளிகளில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவர்களுக்கான பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்வின் போது, துணை மேயர் வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு. கல்விக்குழுத் தலைவர் மாலதி நாகராஜ், மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

