கோவை: கோவையில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா முன்பு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடை தூய்மை பணியை மேற்கொண்டது கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.
கோவை பார்க் கேட் பகுதியில் செம்மொழிப் பூங்கா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செம்மொழிப் பூங்கா அமைய உள்ள பகுதியில் பிரதான சாலையில் இருந்த சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஐந்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் கையுறை, முக கவசம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதனால் எளிதில் நோய் தொற்றும் சூழலில் அபாயகரமான நிலையில் அவர்கள் பணிகளை மேற்கொண்டு இருந்தது பேசு பொருளாகி உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை தடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி மாவட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் கூடிய அறிவுரையை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.