கோவை: பொங்கல் விடுமுறை முடிந்து கோவை திரும்பிய மக்களால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்ததை அடுத்து பலரும் கோவையில் இருந்து அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர் , அதே சமயம் பலரும் கோவைக்கு வருகை புரிந்தனர்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை விடுமுறையானது நேற்றுடன் முடிகிறது. இன்று முதல் மீண்டும் பள்ளி கல்லூரிகள் அலுவலகங்கள் செயல்பட உள்ள நிலையில் பொங்கல் விடுமுறைக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று இருந்த பொது மக்கள் கோவை திரும்பினர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கு வருகை புரிந்தவர்களும் அவர்களது ஊர்களுக்கு திரும்பினர்.
இதனால் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சூலூர் பேருந்து நிலையம் என அனைத்து பேருந்து நிலையங்களிலும் வழக்கமான கூட்டத்தை விட மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.
பல்வேறு ஊர்களில் இருந்து கோவை வந்தடைந்த பொதுமக்கள் பேருந்துகளில் கூட்டம் அதிகமாகவே இருந்ததாகவும் கூடுதலான பேருந்துகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தனர்.

