கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை முதல் நடைபெற்று வந்த போராட்டம் அமைச்சர் கூறியதை தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை முதல் நடைபெற்று வந்த போராட்டம் அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1980களில் நிலம் கையகப்படுத்தப்படும் பொழுது நிலம் கொடுத்தவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி தற்பொழுது வரை உரிய இழப்பீடு தராததால் காலை 10 மணி முதல் நிலம் கொடுத்தவர்கள் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வந்தனர் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் உட்பட கட்சியினர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் இடையே இரண்டு முறை அதிகாரிகளுடனும் மாவட்ட ஆட்சியர் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் உயர்மட்ட குழு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.