கோவை: கோவையில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி பரவிய நிலையில், அவர் கடத்தப்படவில்லை, அது கணவன் மனைவி சண்டை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் அருகே இருகூரில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் பெண்ணை தாக்கி காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி உள்ளார்.
இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து கோவை மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் பேசிய அவர், கோவை இருகூர் பகுதியில் காரில் பெண்ணை இழுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை போலீசார் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அந்த காரை போலீசார் அப்பகுதி முழுவதும் தேடினர்.
ஆனால் கார் சிக்கவில்லை. அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் வெள்ளை நிற கார் வேகமாக சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உண்மையில் பெண் கடந்தப்பட்டாரா அல்லது குடும்ப விவகாரத்தில் தகராறில் ஈடுபட்டு அழைத்து செல்லப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த பெண்ணிடம் விசாரணையை தொடங்கினர்.
அப்போது அந்த பெண் தான் கட்டுப்பாட்டு அறைக்கு பெண் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் தெரிவிக்கவில்லை, பெண்ணை தாக்கி இழுத்து செல்வதாகதான் தெரிவித்தேன் என கூறினார்.
கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த பெண் கூறியதாவது:
தான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நேற்று முன்தினம் 6.30 மணிக்கு மேல் தனியாக நடந்து வந்தேன். அப்போது எனக்கு எதிரே ஒரு வெள்ளை நிற கார் நின்றிருந்தது. அதில் முன்பகுதியில் வெள்ளை சட்டை அணிந்த ஆண் அமர்ந்து இருந்தார். அவரது அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்த வெள்ளை சட்டை அணிந்த நபர் பெண்ணின் கழுத்தை பிடித்து நெறுக்கினார். காரில் பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த பெண் சத்தம் போட்டதால் தான் நான் அங்கு பார்த்தேன். இதனால் அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை நிறுத்தி அவரிடம் காரில் பெண்ணை தாக்குவதாக தெரிவித்தேன். அவர் ஒரு ஆண் நபரை நிறுத்தி கூறும்படி தெரிவித்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவித்தேன். பெண் கடத்தப்பட்டாக நான் கூறவில்லை. அந்த காரை நான் பார்த்தது இல்லை. அவர் காப்பாற்றுங்கள் என கத்தவில்லை. தாக்கியதில் வலியால் கத்தினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனாலும் போலீசார் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து தீவிரமான அந்த காரை தேடி வந்தனர். அப்போது அந்த கார் ஒண்டிப்புதூர் அம்மன் நகர் 3வது வீதியை சேர்ந்த 51 வயது நபரின் கார் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று அவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் கணவன் – மனைக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் கடத்தப்பட்டதாக தெரிவித்த பெண்ணிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவர் கூறும்போது,
“நான், எனது கணவர், 15 வயது மகன் ஆகியோர் இருகூர் ராவுத்தர் பிரிவு அருகே காரில் ஒரு பேக்கரிக்கு சென்றோம். அப்போது பழங்கள் வாங்க எனது கணவர் காரில் இருந்து இறங்க கூறினார். நான் இறங்க மறுத்ததால் எனக்கும், கணவருக்கும் இடையே தகராறு எற்பட்டது.
உடனே நான் காரில் இருந்து இறங்கி தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறினேன். இதனால் எனது கணவர் காரில் ஏற கூறி அடித்தார். அப்போது காரில் பின்னால் இருந்த எனது மகன் சமாதானம் செய்து ஏற கூறினார். பின்னர் நான் காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டோம். இதை அங்கிருந்தவர்கள் தவறாக நினைத்து விட்டார்கள்” என்றார்.
மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் பெண் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி பெண் கடத்தப்படவில்லை என உறுதி செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இருந்தபோதிலும், ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்று தெரிந்தவுடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

