Header Top Ad
Header Top Ad

பூட்டிய வீடுகளுக்குள் கைவரிசை; கோவையில் வாலிபர் கைது… நகைகள் பறிமுதல்!

கோவை: திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருடிய வாலிபரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர் (வயது 59) என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தார்.

பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் வெள்ளி மற்றும் ரூ.ஒரு லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், விசாரணை சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

Advertisement

விசாரணையின் போது, பேரூர் பகுதியில் வசிக்கும் காசிநாதன் என்பவரது மகன் சந்தானம் (வயது 28) இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, சந்தானத்தைக் கைது செய்த காவல் துறையினர், மேலே குறிப்பிடப்பட்ட நகை மற்றும் பணத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், சந்தானம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அந்த வழக்கிலும் சந்தானம் திருடிய 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, சந்தானம் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டத்திற்குப் புறம்பாக குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Recent News