Header Top Ad
Header Top Ad

கோவையில் கடைகளை குறிவைத்து திருட்டு: வியாபாரிகள் ஷாக்

கோவை: கோவையில் மளிகை கடை, பேக்கரிகளை குறிவைத்து கொள்ளை சம்பவம் நடைபெறுவது வியாபாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கோவை ரங்கே கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மங்கைலால் (62). இவர் ஆர்.ஜி வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் காலை மளிகை கடைக்கு அருகில் கடை நடத்தி வரும் ஒருவர் மங்கைலாலுக்கு போன் செய்து மளிகை கடையின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மங்கைலால் உடனே கடைக்கு வந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையின் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கைலால் வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement

தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து மங்கைலால் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி திருடனை தேடி வருகின்றனர்.

கடந்த 4ம் தேதி இதேபோல கணபதியில் முதியவர் நடத்தி வரும் பேக்கரியின் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் திருட்டு போனது. இதனால் போலீசார் பேக்கரி, மளிகை கடையை குறி வைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடி வருகிறார்களா? ஒரே கும்பல் திருட்டில் ஈடுபட்டு வருகிறதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News