கோவை: SIR என்று சொன்னாலே தி.மு.க-வுக்கு பயம் வந்து விடுகிறது. விஜய் கொடுத்த பணத்தை கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட பெண் திருப்பிய அனுப்பியதற்கு இது தான் காரணம் என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிப்பதற்காக, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணை ஜனாதிபதியாகத் தமிழகத்திற்குப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருகை தரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்குப் பிறகு, தி.மு.க-விற்கு ‘சார்’ என்று சொன்னாலே பயம் வந்துவிடுகிறது.
SIR
நேரு காலத்தில் இருந்தே வாக்காளர் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. பீகாரில் நடந்த சம்பவத்தில் 65 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்து விட்டார்கள். மீதமுள்ளவர்கள் இறந்து விட்டார்கள். ஆனால், கொளத்தூர் தொகுதியில் 900 வாக்குகள் அதிகமாக உள்ளன. தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் போலியாகச் சேர்த்த வாக்காளர்கள் பற்றி தெரிந்து கொள்ள நேரிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். இதனால் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்று பயப்படுகிறார்கள்.
இந்த கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசாங்கம் தான் செய்ய உள்ளது. எனவே ஏன் நடுக்கமும் பயமும் வருகிறது? மேலும், ஒரு சிலர் உதவி செய்யும் நோக்கத்துடன் கொடுப்பார்கள். சிலர் உதவியை வாங்க மறுப்பார்கள். சிலர் யாரிடமும் உதவி வாங்காமல் வாழ வேண்டும் என நினைப்பார்கள். அந்த நோக்கத்தில் விஜய் கொடுத்த பணத்தை அந்தப் பெண்மணி பணத்தைத் திருப்பி அனுப்பி இருக்கலாம்
இவ்வாறு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.





