சென்னை: திருப்புவனம் அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், கடமை தவறியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணை என்ற பெயரில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோவும் வெளியாகி, போலீஸ் தாக்குதலை அம்பலப்படுத்தியது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசையும், போலீசாரையும் கடுமையாக சாடியுள்ளது. இந்த வழக்கில் அதிகாரிகளை காப்பாற்ற முயன்றால் கடுமையான உத்தரவுகளை இட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வீடியோ காலில் பேசினர், அப்போது, “நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நான் இருக்கிறேன். உடனே நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன். தைரியமாக இருங்கள்.” என்றார்.
மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது X வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு.
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.