கோவை: அவினாசி சாலை மேம்பாலம் முழுக்க முழுக்க மாநில நிதியில் கட்டப்பட்ட மேம்பாலம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கோவையில் ரூ.1791.23 கோடி மதிப்பீட்டில், கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர் கட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை நாளை காலை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய மேம்பாலத்தை அமைச்சர் எவ.வேலு, மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன், தீர்மான குழு செயலாளர் நா.கார்த்திக் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் எ.வ வேலு நிருபர்களிடம் கூறுகையில், ”புதிய மேம்பாலத்தை நாளை முதல்வர் துவக்கி வைத்து மேம்பாலத்தில் பயணம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. நான் கோவை வந்தவுடன் பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டியதற்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது முழுக்க, முழுக்க மாநில அரசு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கான நிதி கிடையாது” என்றார்.




