கோவை: தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஜவுளி தொழில்கள், நூற்பாலைகள் மற்றும் பருத்தி உற்பத்தி காரணமாக மான்செஸ்டர் என அழைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள கோயம்புத்தூரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அண்டை மாவட்டத்தினரும், அண்டை மாநிலத்தவரும் ஏன் வடநாட்டு மக்களும் இங்கு அதிகம் வசிக்கின்றர்.
பெருகி வரும் தொழில்வளம் காரணமாக இங்கு வரும் லட்சக்கணகான மக்களுக்கு சிவப்பு கம்பளம் நீட்டி வருகிறது கோவை மாநகரம்.
பல லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு தற்போது படிப்படியாக போக்குவரத்து நெரிசல் குறைந்து வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள மேம்பாலங்களை பற்றி விரிவாக காண்போம்.
G.D.Flyover (ஜிடி மேம்பாலம்)
இது தமிழ்நாட்டிலேயே நீளமான மிகப்பெரிய மேம்பாலமாகும். பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் நிறைந்த அவினாசி சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வந்த நிலையில், அதனைக் குறைக்கும் விதமாக கட்டப்பட்டது இந்த மேம்பாலம்.
சுமார் 10.01 கி.மீ. நீளம் கொண்ட ஜிடி மேம்பலம் Uppilipalayam முதல் Goldwins வரை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பாலத்தில் 4 இடங்களில் ஏறி இறங்கும் ரேம்ப்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் ரூ.1,100 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை கடந்த 2025ல் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேம்பாலத்தில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் விதமாக AI கேமராக்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Trichy Road Flyover (திருச்சி சாலை மேம்பாலம்)
3.15 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்ட மூன்று சந்திப்புகளை கடக்கும் மேம்பாலம் இது.
சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், டவுன்ஹால், சிங்காநல்லூர், போக்குவரத்தை சீரமைக்க உதவுகிறது. கடந்த 11 ஜூன் 2022 அன்று இந்த மேம்பாலம் திறக்கப்பட்டது.

ஸ்டூடியோ ஸ்டாப் அருகே தொடங்கும் இந்த மேம்பாலம், கண்ணன் டிபார்ட்மென்ட் சென்று முடிவடைகிறது. இடையே உக்கடம் பைபாஸ் சாலைக்கு இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.
Kavundampalayam Flyover (கவுண்டம்பாளையம் மேம்பாலம்)
மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது கவுண்டம்பாளையம் மேம்பாலம். சங்கனூர் பள்ளம் முதல் கவுண்டம்பாளையம் காவல் நிலையம் (சேரன் நகர்) வரை சுமார் 1.2 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்டது.

இந்த மேம்பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த 2018ல் தொடங்கியது. பணிகள் முடிவடைந்து 2022ல் பாலம் திறக்கப்பட்டது.
Avinashi Road Flyover (மரக்கடை மேம்பாலம்)
கோவையில் பழமையான மற்றும் முக்கியமான ரவுண்டபவுட் மேம்பாலமாக உள்ளது இந்த மேம்பாலம். கடந்த 1974-ல் கட்டப்பட்டது; ரயில்தடத்தை கடக்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த இரண்டடுக்கு மேம்பாலம் இன்று வரை கோவையின் அடையாளாமகத் திகழ்கிறது.
இந்த மேம்பாலத்தின் கட்டமைப்பை மாற்றும் பணிகளில் கோவை மாநகராட்சி தற்பொது கவனம் செலுத்தி வருகிறது.

அவினாசி சாலையில் இருந்து ப்ரூக்பாண்ட் சாலை, பூமார்க்கெட் சாலை, கூட் செட் சாலை, வடவள்ளி சாலைகளை இணைக்கும் முக்கியமான மேம்பாலமாக உள்ளது.
தற்போது புதிய நீண்ட G. D. Naidu Elevated Expressway-யின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.
Ukkadam Flyover (உக்கடம் மேம்பாலம்)
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது இந்த மேம்பாலம். கடந்த 2024ல் கட்டப்பட்ட ரூ.481 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உக்கடம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு சரியான தீர்வாக உள்ளது இந்த மேம்பாலம். ஒருபுறம் பாலக்காடு, பொள்ளாச்சி சாலைகளில் இறங்கும் இந்த மேம்பாலத்தின், மறுபுறம் உக்கடம் பைபாஸ் சாலையிலும், பேரூர் பைபாஸ் சாலையிலும் ஏறிக்கொள்ள முடியும்.
North Coimbatore Flyover (வடகோவை மேம்பாலம்)
கோவையில் உள்ள கன்பியூசிங் மேம்பாலம் இது. கிராஸ்கட் சாலையில் தொடங்கும் இந்த மேம்பாலம் ரயில் தடத்தைக் கடந்து வடகோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் இருபுறமும் இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
பாலத்தின் கீழ் பகுதியில் ஆங்காங்கே பிரியும் சாலைகளுக்குள் புகுந்து சரியாக வெளியேறுவது இந்த நாள் வரையிலும் கோவை வாசிகளுக்கே கொஞ்சம் கன்ப்யூசன் தான்.

கடந்த 1991ல் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், ரூ.12 கோடிமதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது.
Gandhipuram Flyover (காந்திபுரம் மேம்பாலம்)
கடந்த 2017ல் அதிமுக ஆட்சியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இறங்கு தளங்கள் இல்லாமல் போனதாலும், 100 அடி சாலையில் மிகவும் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டதாலும் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது.

காந்திபுரம் சத்தி சாலையில் ரேம்ப்கள் அமைத்தால் மட்டுமே பாலத்தின் முழு பயன்பாடு கிடைக்கும் என்று மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது நெடுஞ்சாலைத்துறை.
Periyanaickenpalayam Flyover (பெரியநாயக்கன்பாளையம்)
மேட்டுப்பாளையம், நீலகிரி செல்ல ஏதுவாக அமைக்கப்பட்ட பாலம் தான் இது. 1.85 கி.மீ தூரம் வரை அமைக்கப்பட்ட பாலம் வித்யாலயா கல்வி நிறுவனம் அருகே ஆரம்பித்து வண்ணான் கோவில் பகுதி வரை இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. மொத்தம் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தை 2023ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இவை தவிர ஒண்டிப்புதூர், போத்தனூர், பொள்ளாச்சி சாலையில் பல்வேறு மேம்பாலங்கள், பீளமேடு, இருகூர், ஆவராம்பாளையம், கணபதி உள்ளிட்ட இடங்களிலும் மேம்பாலங்கள் உள்ளன.
புதிய மேம்பாலங்கள்
சரவணம்பட்டி, காளப்பட்டி, சாய்பாபா காலனி, துடியலூர் பகுதிகளுக்கு புதிய மேம்பாலங்கள் திட்டமாக உள்ளன. இதில் சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்கப்பட உள்ளது. சிங்காநல்லூரில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மெட்ரோ திட்டத்தால் சரவணம்பட்டி பாலத்திற்கு இன்னும் என்ஓசி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் வேறு எந்தெந்த மேம்பாலங்கள் உள்ளன என்பதை கீழே கமெண்ட் செக்ஷனில் கூறுங்கள் வாசகர்களே…


Nggo colony flyovet