கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிற் சங்கங்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்
கோவை மாவட்டத்தில் இன்று தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது சிலர் தரையில் அமர்ந்து கொடிகளை பிடித்தபடி கோஷங்கள் எழுப்பினர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கலைந்து செல்லும்படி கூறினார்கள்.
அதன் பிறகு சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பிய போராட்டக்காரர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோன்று கோவை கோட்ட எல்.ஐ.சி அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி கோட்ட அலுவலகம் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.ஐ.சி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதிக்க கூடாது, பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த இரண்டு இடங்களிலும் நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.