கோவை: உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
ஆனால் அதனைத் தொடர்ந்து உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழைய அவினாசி மேம்பாலம், நஞ்சப்பா ரோடு, ஆடிஸ் வீதி, ஜவான் ரவுண்டானா போன்ற சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலை உருவாக்கின.
இதனால் பொதுமக்கள் சிக்னல் அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து உடனடியாக சிக்னல் அமைத்தனர். நேற்று முதல் இது செயல்பாட்டுக்கு வந்தது.
இதனால் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், “தீபாவளி பண்டிகை முடிந்து போக்குவரத்து நிலை சீராக இருந்தால், இந்த சிக்னல் நிரந்தரமாக வைக்கலாமா அல்லது நெரிசல் நேரங்களில் மட்டுமா செயல்படுத்தலாமா என்பதில் முடிவு எடுக்கப்படும்,” என தெரிவித்தனர்.





