கோவை: கோவை,
கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு உதவுவதே தனது நோக்கமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்த போதும், எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தி.மு.க வின் வளர்ச்சி பணிக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்ப்பணிக்க முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தி.மு.க வின் வளர்ச்சியும், மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் சமூக நல அரசியலும் தான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்ததாகவும் கூறி உள்ளார்.
தி.மு.க வில் தனது அம்மா கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததையும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்ததையும்,சமூக ஊடகங்களில் சிலர் மேற்கொண்ட தரக்குறைவான விமர்சனங்களும் தன்னையும், குடும்பத்தையும் பாதித்து உள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
“கருத்தை கருத்தாகவே எதிர்கொள்வோம், களத்தில் சந்திப்போம்”
என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தி.மு.க வில் இணைந்ததற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கவுண்டம்பாளையம் பகுதிச் செயலாளர் சரத்விக்னேஸ் உள்ளிட்ட பலருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.
நான் தொடர்ந்து என் சமூகப் பணியை முழு வீச்சுடன் தி.மு.க வில் இருந்து தொடர்ந்து செய்வேன் என உறுதியுடன் வைஷ்ணவி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.