கோவை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக வருவாய் துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெறும் முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் துறை ஊழியர்கள் உட்பட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுவதை கைவிட வேண்டும், இந்த திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும், கிராமப்புற உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம்முறை ஊதியத்தை வழங்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியை வருவாய்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.