கோவை: முக கவசம் அணிந்து கொண்டும் உஷாராக வாகன எண்ணை மறைத்து கொண்டும் வந்து காய்கறிகளை திருடி செல்லும் காய்கறி திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை புல்லுகாடு பகுதியில் முக கவசம் அணிந்து கொண்டும் உஷாராக வாகன எண்ணை மறைத்து கொண்டும் வந்து காய்கறிகளை திருடி செல்லும் காய்கறி திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகர் உக்கடம் புல்லுக்காடு பிலால் எஸ்டேட் சாலை பகுதியில் காய்கறிகள் கடைகள், மளிகைகடைகள் பல இயங்கி வருகின்றது. நாள்தோறும் வியாபாரம் முடிந்த பிறகு காய்கறி கடையினர் காய்கறிகளை சாலையோரம் தார்பாய் போட்டு மூடிவிட்டு செல்வது வழக்கம்.
Advertisement

அதே போன்று நேற்றும் வழக்கம்போல் ஒரு காய்கறிகடையினர் வியாபாரம் முடிந்து காய்கறிகளை சலையோரம் வைத்து தார்பார்களை கொண்டு மூடி வைத்து விட்டு சென்றுள்ளனர். பிறகு இன்று காலை வந்து பார்த்த போது காய்கறிகள் கூடையோடு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் கடைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அதிகாலை சுமார் 3:10 மணியளவில் இரண்டு சக்கர வாகனத்தில் முக கவசம் அணிந்து வந்த கொள்ளையன் ஒருவன் காய்கறிகளை இரண்டு பெரிய கூடைகளோடு கொள்ளையடித்து விட்டு வாகனத்தில் சென்றது தெரியவந்தது. வாகனத்தின் எண்ணை கொண்டு கண்டு பிடிக்கலாம் என்றால் சுதாரிப்பாக வாகனத்தின் எண்ணையும் துணியால் கட்டி மறைத்துள்ளான்.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகளை பகிர்ந்துள்ள அப்பகுதி கடைக்காரர்கள் அந்த திருடனை பிடிக்க வேண்டும் என்றும், இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணிகளை அதிகம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.