கோவை: கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக விரட்டுவதும், அதனைப் பார்த்து பக்தர்கள் அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கிருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7வது மலையில் சுயம்புலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இதனால், வனத்துறையினர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களாகவே அடிவாரத்திற்கு வரும் யானைகள் அங்குள்ள கடைகள், அன்னதானக்கூடத்தில் புகுந்து உணவுப் பண்டங்களைச் சாப்பிடுகிறது. மேலும் அங்கிருக்கும் பொருட்களைச் சேதப்படுத்திச் சென்று விடுகிறது.
அவ்வாறு வரும் காட்டு யானைகள் வனத்துறையினர் போராடி வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர்.
ஒற்றைக் காட்டு யானை
அந்த வகையில், நேற்று வெள்ளியங்கிரி அடிவாரத்திற்கு வந்த ஒற்றைக் காட்டு யானையைக் கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த வனத்துறை ஊழியர்கள் மேலும் யானை உள்ளே வராமல் விரட்டச் சென்றனர்.
அப்பொழுது அவர்களை யானை விரட்டியது. வனத்துறையினர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி தப்பினர். இதனைக் கண்ட அங்கு கூடியிருந்த பக்தர்கள் அலறினர்.
இதனை அங்கிருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.