கோவை: கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் 10,008 தீப விளக்கு பூசை பிரமாண்டமாக நடைபெற்றது.
திருப்பூரை சார்ந்த எம்.எஸ்.பி. அறக்கட்டளையினர் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் குழு இணைந்து ஆண்டுதோறும் கோவை வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் 10,008 திரு விளக்கு பூஜையை நடத்துகின்றனர்.
அதன்படி, 63வது ஆண்டாக நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு கணபதி ஓமத்துடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர். நேற்று மாலை 4 மணியளவில் நவகிரக பூஜை மற்றும் மலர் அலங்கார புஸ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பிரமாண்டமான 10,008 தீப விளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் சிவ லிங்கம், விநாயகர், அம்மன் உருவத்தில் அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்காரம் மற்றும் கோயில் நடையில் தீப விளக்குகள் ஏற்றி வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது.
தொடர்ந்து கயிலாய வாத்திய இசைக்கு சிவ பக்தர்கள் பக்தி பரவசத்தில் உற்சாக நடனமாடினர்.

