வெள்ளியங்கிரி மலை சென்றவர் உயிரிழப்பு; பக்தர்களே கவனம்!

கோவை: வெள்ளியங்கிரி மலை சென்ற பக்தர் இரண்டாவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரையாகச் சென்று, 7வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிப்பது வழக்கம்.

அந்த வகையில் வெள்ளியங்கிரி மலை ஏற தற்போது வனத்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வருகின்றனர்.

இதனிடையே திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா (வயது 36) என்ற பக்தர் தனது குழுவினருடன் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறினார். 7வது மலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அனைவரும் கீழே இறங்கியுள்ளனர்.

இரண்டாவது மலைக்கு வரும் போது சிவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடல் நலக்குறைபாடு மற்றும் சுவாசக்கோளாறு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News