கோவை: விஜய் முதல்வராகத்தான் வந்துள்ளாரே தவிர துணை முதல்வர் ஆவதற்கு இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார் என்றார்.
முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டுவிட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து உள்ளார் என்றும் தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவது, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று என்பதை காட்டுகிறது என்றார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல, பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது என்றும் குற்றம் சாட்டினார்., தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர் என்றும் மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றார்.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் த.வெ.க கட்சியில் உள்ளனர் என்றும் த.வெ.க மற்றும் என்.டி.ஏ கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாறவில்லை என்று தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விஜய் முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார் என்று துணை முதல்வர் ஆவதற்கு அல்ல என சுட்டிக்காட்டினார். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு கூடும் கூட்டம் போல் விஜயை பார்க்கவும் மக்கள் வருவதாகப் செங்கோட்டையன் தெரிவித்தார்.

