கோவை: கூட்டணியில் உள்ள குழப்பங்கள் எல்லாம் களைந்து, திமுகவிற்கு எதிரான வியூகம் வகுத்து வெற்றி பெறுவோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. NDA கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் பாஜக சார்பில் புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இன்றைய தினம் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நாள், துணை குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக களம் காணும் சிபி ராதாகிருஷ்ணன் வெகு நிச்சயமாக வெற்றி பெற்று துணை குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார் என தெரிவித்தார்.
சி பி ராதாகிருஷ்ணன் கட்சியில் சாதாரண தொண்டராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் என குறிப்பிட்ட அவர் இந்திய தேசத்தின் துணை குடியரசுத் தலைவராக ஒரு தமிழராக அவர் பணி சிறக்க வேண்டும் என்றார்.
தமிழ் தமிழர் என்று பேசுகின்ற திமுக துணை குடியரசுத் தலைவராக ஒரு தமிழர் நிற்கும் பொழுது அவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான துரோகம் செய்து வருகிறார்கள் அவர்களை வரலாறு மன்னிக்காது என சாடினார்.
NDA கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருக்கிறார்கள் எங்கள் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர் அதற்காக அனைவரும் ஓரணியில் சேர்க்க வேண்டும் அதைத்தான் பாஜகவும் நினைத்து செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் கூட்டணியில் இருக்கின்ற குழப்பங்கள் சரி செய்யப்படும், திமுகவிற்கு எதிராக வியூகத்தை வகுத்து வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.
அதிமுக தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பது குறித்தான கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்திக்கிறார் என்றால் கூட்டணி தொடர்பான விஷயம் என்றும் மற்ற தலைவர்கள் டெல்லி செல்கிறார்கள் தலைவர்களை பார்க்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். ஆதாரம் இல்லாமல் செய்தியாளர்கள் நீங்களாகவே பிரேக்கிங் போடுகிறீர்கள் என்றும் உங்கள் டிஆர்பிக்காக நான் எதையும் கூற முடியாது மற்ற தலைவர்கள் கருத்துக்கும் நான் பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
மேலும் விஜய் குறித்து எல்லாம் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறேன் இன்று சிபி இராதாகிருஷ்ணன் மட்டும் தான் செய்தி எனவும் தெரிவித்துச் சென்றார்.