கோவை: தீபாவளி என்றால் என்னவென்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஈஷா நிறுவனர் சத்குரு.
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஈஷா நிறுவனம் வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு, நீங்களும், நீங்கள் தொடும் அனைத்தும் பிரகாசமாக ஒளிர உங்களுக்குள் வெளிச்சம் பரவட்டும். உங்கள் தீபாவளி ஒளிமயமாக ஜொலிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

“தீபாவளி என்பது ஒளியின் பண்டிகை, வெளிச்சத்தில் மட்டுமே நாம் தெளிவாகப் பார்க்க முடியும். நம்மால் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டால், நம்மால் சிறப்பாக நடக்கவோ, ஓடவோ, வாழ்க்கையில் எதையும் சிறப்பாகச் செய்யவோ முடியாது.
தெளிவாகப் பார்ப்பது என்பது நம் கண்களால் மட்டும் அல்ல. நம் மனதிலும் நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். நம்முள்ளே உள்ள வெளிச்சத்தை யாராலும் அணைக்க முடியாத அளவிற்கு அதனை ஒளிரச் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
இந்தப் பண்டிகை ஒரு ஆழமான புரிதலில் இருந்து வந்தது. குளிர்காலத்தில், பூமியின் வடக்குக் கோளம் சூரியனை விட்டு விலகி, குளிர்ச்சியடையும் காலம் அது. அந்த நேரத்தில் போதுமான சூரிய ஒளி இல்லை. இதனால் மனத்திலும், உடலிலும் ஒரு மந்தநிலை ஏற்படும். இதை இந்திய மக்கள் உணர்ந்திருந்தனர்.

அதனால் தான் விவசாயிகளும் அந்தக் காலத்தில் விதைகளை விதைப்பதில்லை, ஏனெனில் அவை நன்றாக முளைக்காது, ஆற்றல் குறைந்திருக்கும். அனைத்தும் சற்று மந்தமாக இருக்கும். அதனால் அந்தக் காலத்தில் விளக்கேற்றும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த தீபாவளியில், நம் உள்ளுக்குள் வெளிச்சம் பரவ, நம் வாழ்க்கை ஒளிர நாம் உறுதி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



