கோவை: தேமுதிக தேர்தல் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் துவங்குகிறது என விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை ரோட்டரி கிளப் தெற்கு 2025-26 ம் ஆண்டிற்கான 42வது தலைவராக பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் விஜய் பிரபாகரன் உரை
சிறுவயதில் இருந்து ரோட்டரி கிளப் குறித்து கேட்டுள்ளேன் இது தான் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு, இந்த நிகழ்வு ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு புதிதாக உள்ளது என தெரிவித்தார்.
ஆகஸ்ட் முதல் சுற்றுப்பயணம் உள்ளது என தெரிவித்தார்.
குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கிறாயோ இல்லையோ கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என அப்பா கூறுவார், தேதி கொடுத்தால் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என கூறி துளசி வாசம் மாறும் தவசி வாக்கு மாறாது- என விஜயகாந்த் வசனத்தை மேற்கோற்காட்டினார்.
அப்பா விஜயகாந்த் நம்மை விட்டு செல்லவில்லை அவர் நம்முடன் தான் இருக்கிறார் என தெரிவித்த அவர் அப்பா விட்டு சென்ற வேலைகளை அவரது மகன்கள் நாங்கள் செய்கிறோம் என்றார்.
தேமுதிக ஒரு கிளப் இல்லை அது ஒரு கட்சி, கேப்டன் கனவும், ரோட்டரி கிளப் உங்கள் கனவும் ஒன்று, நீங்கள் கிளப்பாக செயல்படுகிறீர்கள் அப்பா கட்சியாக செய்தார், அப்பா விட்டு சென்ற செயல்களை நான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன் அந்த தேரை இழுக்க நான் தயார் என்றார்.
முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது முடியும் என்பது அறிவாளிக்கு சொந்தமானது என்பது அப்பா கூறி கொண்டே இருப்பார் என்றார்.
விஜய் பிரபாகரன் பேட்டி
ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் தேமுதிக சார்பில் பிரச்சாரம் துவங்குகிறது என்றும் கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் துவங்குகிறது என்றார். உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது என்ற தெரிவித்த அவர் ஆகஸ்ட் 3 முதல் 28ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் இருக்கும் என்றார்.
கட்சியை வலுப்படுத்துவதற்கும் மக்கள் மனதில் நம்பிக்கையை மீண்டும் விதைப்பதற்கும் இந்த பயணம் இருக்கும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறினார். ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து கூறுவோம் என்று பொதுச் செயலாளர் ஏற்கனவே கூறியிருக்கிறார், வருகின்ற ஐந்து மாதங்கள் கட்சிப் பணிகளும் மக்கள் பிரச்சனையும் கட்சியை வலுப்படுத்துவது தான் எங்களுடைய எண்ணம் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு பிரதமர் மோடியை தேமுதிக சார்பில் யாரும் சந்திக்கவில்லை என்பது தொடர்பான கேள்விக்கு, நாங்கள் இருக்கிறோமா? என கேள்வி எழுப்பினார்.
நாங்கள் கூட்டணியில் இருக்கும் பொழுது பிரதமர் வந்து எங்களை பார்க்கலாம் அல்லவா?
பிரதமரை மரியாதை நிமிர்த்தமாக தேவையான சமயங்களில் சென்று சந்திப்போம் எங்களுக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது சந்திப்போம் தற்பொழுது மோடி பிரதமராக வந்து மக்கள் பணியை செய்துள்ளார் ஜனவரி மாதம் கூட்டணி முடிவானவுடன் மற்றவற்றை கூறுவோம் என பதில் அளித்தார்.
கமலஹாசன் எம்பி ஆனதை வரவேற்கிறோம், நீண்ட நாட்கள் சினிமா துறையில் இருந்து இன்று அவர் அரசியலுக்கு வந்துள்ளார், திமுக சார்பில் அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மக்கள் பிரச்சினையை கமலஹாசன் பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தேமுதிக பார்வையில் தமிழக வெற்றிக்கழகம் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு தேமுதிக பார்வை மக்களை நோக்கி மட்டும் தான் வேறு எதை நோக்கியும் அல்ல என பதிலளித்து புறப்பட்டார்.