கோவை: கோவை மாநகரில் மட்டும் 5,736 மாணவர்கள் நாளை நீட் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது.
கோவை மாநகரில், 8 கல்வி நிறுவனங்களில் 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவை அரசு கலைக்கல்லூரி, அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரி, ஜி.சி.டி, கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த மையங்களில் மட்டும் 5,736 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு நடைபெறும் மையங்களில் தலா ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், தலைமை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று முதலே கல்வி நிறுவனங்களில் போலீசார் பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.