கோவை: கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் ஊரகப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இதனிடையே காப்புக்காடுகளில் இருந்து 1-3 கி.மீ., தொலைவுக்குள் வெளியேறும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து மீண்டும் வனத்திற்குள் விடவும், 3 கி.மீ., தொலைவுக்கு மேல் வெளியே வரும் காட்டுப்பன்றிகளைச் சுடவும் வனத்துறையினருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோவையில் கடந்த மாதம் இதற்கான துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் நடைபெற்றது.
இதனிடையே, கோவையில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரங்கள், சாடிவயல், காருண்யா நகர், மத்துவராயபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் அவ்வப்போது காட்டுப்பன்றிகள் நுழைவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பன்றி நடமாடும் காட்சிகள்
வீட்டின் அருகேயே காட்டுப்பன்றிகள் மேய்வதால், குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், வீட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வேண்டும் என்று கூறும் விவசாயிகள், சட்டசபையில் அமைச்சர் பொன்முடி கூறியது போல், விவசாயிகள் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.