கோவை: கோவையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் நடமாடி வருவதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளதால், அவ்வப்போது மலையில் உள்ள யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடி விவசாய நிலங்களுக்கு வருகின்றன.
இதனால் சில நேரங்களில் யானை-மனித மோதல்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு காட்டு யானை வலம் வந்துள்ளது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, அலறியடித்து ஓடினர்.
யானை குடியிருப்புப் பகுதிக்குள் வலம் வருவதை அங்குள்ள விவசாயி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
இரவு நேரங்களில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

