கோவை: கோவையில் கீரணத்தம் பகுதயில் சுற்றி திருந்த மூன்று காட்டுயானைகள் அன்னூர் நோக்கி சென்றன.
கோவை கீரணத்தம் பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று யானைகள் அன்னூர் பகுதிக்குச் சென்ற நிலையில் அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் நேற்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் இடிகரை பகுதியில் சுற்றி திரிந்தன. அதனைத் தொடர்ந்து கௌசிகா நதியின் நீர் பாதை வழியாக கோவை மாநகர் கீரணத்தம் பகுதிக்குள் நுழைந்தன. அங்கு ஐடி பார்க் அருகில் உள்ள ஒரு குட்டைக்குள் மூன்று யானைகளும் நீராடி விட்டு குட்டைக்கு பின்புறம் உள்ள மரங்கள் நிறைந்த பகுதிக்குள் சென்று மறைந்தன.
யானைகளை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் திரண்ட நிலையில் வனத்துறையினரும் காவல்துறையினரும் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
யானையை காலை முதல் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் இரவு வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அப்பொழுது அந்த காட்டு யானைகள் அத்திப்பாளையம், காட்டம்பட்டி, கணேசபுரம் வழியாக அன்னூர் நோக்கி சென்றது.
தற்போது அன்னூரில்- கருமத்தம்பட்டி சாலையில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



