கோவை: கோவையில் காட்டு யானைகளைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நரசிபுரம், தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் ஊருக்குள் புகுந்து கடைகள் நியாய விலை கடைகளையும் சேதப்படுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.
இதன் காரணமாக காரணமாக லட்சக்கணக்கான மதிப்பில் இழப்பீடு ஏற்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
எனவே காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளும் பொதுமக்களும் அந்தந்த பகுதிகளில் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் வனத்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காட்டு யானைகளை பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நின்று பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.
வனத்துறையினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.