Siren on… princess born | கோவையில் பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்

கோவை: பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சைனாகுமார். இவரது மனைவி அஞ்சலி குமாரி (28). இவர்கள் கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

Advertisement

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அஞ்சலி குமாரி 3வது முறையாக கர்ப்பமானார்.

நேற்று முன்தினம் அஞ்சலி குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அஞ்சலி குமாரியை, சைனாகுமார் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அஞ்சலி குமாரி இதுவரை எந்த தடுப்பூசியும் போடவில்லை என்பது தெரிய வந்தது. இருந்தபோதிலும் அவருக்கு பிரசவம் பார்த்தனர். ஆனால் பிரசவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அஞ்சலி குமாரி அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருடன் அன்னூர் அரசு மருத்துவமனை நர்சு பார்வதி, அவசரகால தொழில்நுட்ப உதவியாளர் தனபால், பைலட் ஆனந்த குமார் ஆகியோர் 108 ஆம்புலன்சில் அவரை கோவைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். கோவை நகரை நெருங்கிய போது, அஞ்சலி குமாரிக்கு மேலும் பிரசவ வலி அதிகமானது. இதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த நர்சு மற்றும் உதவியாளர்கள் அஞ்சலி குமாரிக்கு பிரசவம் பார்த்தனர். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் தாயும், சேய்யும் சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்.

Advertisement

Recent News