கோவையில் சிறுவன் ஓட்டிய சரக்கு வாகனம் மோதி பெண் பரிதாப பலியானார்…
கோவை அவிநாசி ரோட்டில் சிறுவன் ஓட்டிய சரக்கு வாகனம் மோதி பெண் பலியான விவகாரத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாகாளி(55). இவர் அரசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி செல்வி(50) தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி இரவில் வேலை முடிந்து தனது கணவர் மற்றும் ரங்கம்மாள் என்பவருடன் ஏடிஎம்-மில் பணம் எடுக்க அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் நிலைதடுமாறு மூவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களில் செல்வி, ரங்கம்மாள் ஆகியோருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த செல்வி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அதன் உரிமையாளர் பைலட்ராஜ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.