கோவை: மருதமலை அருகே காட்டுயானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கோவை மருதமலை அருகே தொழிலாளி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கோவை மருதமலை பகுதியில் செந்தில் (55) என்பவர் தன்னுடைய வேலை செய்யும் தாடிக்காரர் தோட்டத்திற்கு நேற்று மாலை செல்லும் போது, திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் செந்தில் என்பவருக்கு வயிற்றுப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது .
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலில் ரோலக்ஸ் யானை சம்பந்தப்பட்டதா ? அல்லது வேறு யானையா ? என்பது குறித்து வனத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செந்தில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.