கோவையில் உல்லாசத்திற்கு அழைத்து வாலிபரிடம் பொருட்கள் பறிப்பு; சரமாரி தாக்குதல்!

கோவை: கோவையில் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து வாலிபரைக் கத்தியால் குத்திய கும்பல் அவரிடம் இருந்த பைக், செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் நவீன் (29 வயது) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சரவணம்பட்டியில் உள்ள மேன்ஷனில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

ஓரினச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரைண்டர் ஆப்பை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகமான நபர் ஒருவர், அவரை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார்.

தொடர்ந்து நவீன், காளப்பட்டி ரோடு, மகா நகர் வனப்பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அந்த நபரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அங்கு காத்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

பின்னர் ஜிபே-வில் உள்ள வங்கிக் கணக்கின் பாஸ்வேர்ட்டை கேட்டனர். ஆனால் அவர் அதனை கூற மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அந்த வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தினர்.

பின் அந்த கும்பல், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவரது பைக்கை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றது.

Advertisement

அந்த வழியாகச் சென்றவர்கள் பலத்த காயமடைந்த வாலிபரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அந்த வாலிபர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் மற்றும் பைக்கை பறித்துச் சென்ற 3 பேரைத் தேடி வருகின்றனர்.

Recent News