கோவை: ரஜினி என்னை நம்பி வந்தால் அவர் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள பைசன் திரைபடம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் கோவை ப்ராட்வே சினிமாவில் பைசன் படக்குழுவினர்களான இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் பசுபதி அமீர், ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் ஆகியோர் ரசிகர்களை சந்தித்து படம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், என்னுடைய படங்கள் அனைத்தும் மக்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் என்றார். இந்த படத்திற்கும் மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது கோவை மக்களுக்கு என்னுடைய டீம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஜாதி ரீதியான படங்கள் எடுப்பது சரியல்ல என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது தொடர்பான கேள்விக்கு இது ஜாதி எதிர்ப்பு படம், எனவே அவர் என்று அவர் கூற மாட்டார் என்று நினைக்கிறேன் என பதிலளித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, என்னுடைய படங்கள் இவ்வாறு இருக்கும் என்னுடன் வேலை செய்வது இவ்வாறு தான் இருக்கும் என்று என்னை நம்பி அவர் வந்தால் அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் அது போன்ற படத்தை எடுப்பேன் என பதிலளித்தார்.
ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளதா அல்லது அரசு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு, ஜாதிகளை மாத்திரை போடுவது போன்று காலி செய்துவிட முடியாது என்றும், ஜாதி என்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஒரு வாழ்வியல் முறையாக உள்ளது. இதனை மாற்றுவதில் நான் மட்டுமல்ல அரசியல்வாதிகள் பல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் என பலரும் ஜாதிக்கு எதிராக வேலை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள், அதுபோன்று சினிமாவிலும் நாங்கள் எங்களால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறோம் என கூறினார்.
அனைத்து படங்களிலும் ஒரு விலங்கை குறிப்பிட்டு அதனை கொல்வது போன்று படம் எடுக்கப்படுவது குறித்தான கேள்விக்கு, மனிதனை கொல்வதற்கு பயமாக உள்ளது. கமர்சியல் படங்களில் எவ்வளவு மனிதர்களை கொன்றாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், நான் சமூகத்தையும் உண்மையையும் வைத்து படம் எடுக்கிறேன், அப்பொழுது மனிதர்கள் சாவது போன்று படம் எடுத்தால் அது என்னுடைய பொறுப்பு. அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது என கூறினார்.



