கோவை: தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூன்று சதவிகித அகவிலைப் படியை ரொக்கமாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் போர்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்,
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத்தை கைவிட வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுபடியினை உயர்த்தி வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் அரசாணை வெளியிட்டு அறிவிக்க வேண்டும், வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக 15,700 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் கோவை மாவட்டம் சார்பில் தர்ணா போரட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக எங்களது மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் 20ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளதாகவும் தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி போராட்ட ஆயத்த மாநாடு சென்னையில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
அதற்கு மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தேர்தலுக்கு முன்பு நடத்துவோம் என தெரிவித்தனர்.



